சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என அளிக்கப்பட்ட மனுவை பரீசிலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ரவுடி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி நாகேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்ததாகவும் அதே போல தனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், என்கவுண்டர் செய்வோம் என விசாரணையின் போது போலீசார் நாகேந்திரனிடம் கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து, எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.