வேலூர்: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வேலூர் மத்திய சிறையில் இருந்தபடியே திட்டமிட்ட ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை செம்பியம் போலீசார் கடந்த 9ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனை, கடந்த 14ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நாகேந்திரனை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
அதன்படி கடந்த 3 நாட்களாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வேலூர் மத்திய சிறையில் ரவுடி நாகேந்திரன் மீண்டும் அடைக்கப்பட்டார்.