சென்னை: ஆம்ஸ்ட்ராங் நினைவு தினத்தையொட்டி, புளியந்தோப்பு சரகத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பிரபல ரவுடி நாகேந்திரனின் தங்கை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வருகிற 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தினமும் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் தொடர்ந்து போலீசார் குற்ற பின்னணி உள்ள ரவுடிகளை கைது செய்தனர்.
அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன் தங்கை கற்பகம் என்பவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகேந்திரனின் தங்கையான கற்பகம் (42) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் இவரது கணவரான சதீஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கற்பகம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.