சென்னை: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை 28 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் உள்ள நினைவிடத்தில், அவருக்கு முழு உருவ சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி பொற்கொடி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொற்கொடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால், ஆம்ஸ்ட்ராங் மனைவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார் வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். இதையடுத்து மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.