சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் ஹரிஹரனை சென்னை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும் ஆம்ஸ்ட்ராங் எதிரிகளையும் ஒருங்கிணைத்ததாக ஹரிஹரன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மவுண்ட் ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வைத்து ஹரிஹரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரை பரங்கிமலை ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் மேலும் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். ரூ.50 லட்சம் யாரிடம் இருந்து வந்தது? எங்கெல்லாம் ரவுடிகள் சந்திப்பு நடந்தது? ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது? பின்னணியில் உள்ள தாதாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.