சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பிரபல ரவுடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொண்டே இந்த கொலைக்கு திட்டமிட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்திற்கு கைது காட்டுவதற்காக போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அதன் பின்பு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் மனுத்தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஏற்கனவே வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரனையும் போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே நீதிமன்றத்தில் ரவுடி நாகேந்திரன் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது தனது தொழில் வாத்தியார் எனக் கூறி 2 வாலிபர்கள் நாகேந்திரனுடன் போட்டோ எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.