சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பணப்பரிவர்த்தனை மற்றும் செல்போன் தொடர்பு உள்ளிட்டவற்றை வைத்து யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரிக்கும் போது 3 பிரபல ரவுடிகள் தொடர்பு கண்டறியப்பட்டது.
கொலைக்கு பணம் கொடுத்தவர்கள் யார். யார் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றது என்பதை பற்றி விரிவான விசாரணை நடந்தபோது அடுத்தடுத்து நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்டோரில் 3 முறை காவலில் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடைபெற்று அவர்கள் கொடுக்கும் தகவல் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய புன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன் மற்றும் சிவசக்தி ஆகியோரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர்.
இதில் புன்னை பாலு, அருள், ராமு ஆகியோருக்கு 3 நாள் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அருள் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அருளிடம் விசாரணை என்பது 3 நாட்களாக நடத்தப்பட்ட நிலையில் உண்மை வெளியாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து இவர் எந்த அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்த விரிவான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பணம் பரிவர்த்தனை தொடர்பாக தொடர்பு இருக்கிறதா அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாக கொலை செய்த கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் காங். முதன்மை பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமனை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அஸ்வத்தாமன் நீக்கம் செய்யப்பட்டதாக இளைஞரணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட 16ஆம் நாளில் நினைவேந்தல் நிகழ்வு போஸ்டரை அஸ்வத்தாமன் ஒட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் நினைவாக அஸ்வத்தாமன் போஸ்டர் ஒட்டிய நிலையில் அவரது கொலை வழக்கில் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.