சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஜூன் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். சிறையிலுள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தியை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் அனுமதி வழங்கினார். பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரும் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.