ஜம்மு: ஸ்ரீநகரில் பயங்கர ஆயுதங்கள், வெடி மருந்துகளுடன் ‘ஹைப்ரிட்’ தீவிரவாதி அர்பத் யூசுப் என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீரின் ராஜ்போரா அடுத்த புல்வாமாவில் வசிக்கும் அர்பத் யூசுப் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்-பத்ருடன் தொடர்பில் இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், 20 லைவ் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை மீட்டனர். மேலும் அர்பத் யூசப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட அர்பத் யூசுப் ஒரு ‘ஹைப்ரிட்’ தீவிரவாதி ஆவார். அதாவது தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றிவிட்டு, பின்னர் தனது இயல்பு வாழ்க்கையை நடத்தி வருபவர்களை ‘ஹைப்ரிட்’ தீவிரவாதி என்று வகைப்படுத்தி உள்ளோம்.
அந்த வகையில் அர்பத் யூசுப், தடை செய்யப்பட்ட அல்-பத்ருவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீர் எல்லையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் சோதனையிட முயன்ற போது, அவர்கள் மீது இரண்டு முறை கையெறி குண்டுகளை வீசினார். ராஜ்போராவில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீதும், பின்னர் ஹவால், ராஜ்போரா புல்வாமாவில் உள்ள சிஆர்பிஎப் முகாமிலும் கையெறி குண்டுகளை வீசிய குற்றவாளி ஆவார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முக்கிய தீவிரவாதியின் போஸ்டர்களை நகர்பகுதியில் ஒட்டியுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.
ராணுவ வீரர் கடத்தல்: குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜாவேத் அஹ்மத் வானி (25), லடாக்கில் பணியாற்றி வந்தார். அவர் உள்ளூர் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக விடுமுறையில் குல்காம் வந்தார். அவர் தனது காரில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது, தீவிரவாத கும்பலால் அவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரில், ராணுவ வீரரின் செருப்புகள் கிடந்தன. ரத்த கறைகளும் காணப்பட்டது. தகவலறிந்த மக்கள், அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ஜாவேத் அஹ்மத் வானியை மீட்பதற்காக, உள்ளூர் போலீசும் பாதுகாப்பு படையினரும் தீவிர ேதடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.