அரியலூர்: திருச்சி-விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் தினமும் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில்கள், வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தில் அரியலூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஒட்டக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசிய பணிகளுக்காக அரியலூர் செல்ல தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே மக்கள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் ரயில்வே கோட்டம் சார்பில் அரியலூர் அருகே வெள்ளூரில் தண்டவாளத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. நேற்று காலை 7 மணி அளவில் சுரங்க பாதையில் தண்டவாளத்துக்கு அடியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இத்காரணமாக தண்டவாளம் பலமிழந்திருக்கும் என கருதி ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியே வந்த விழுப்புரத்திலிருந்து திருச்சி வந்த பயணிகள் (வ.எண் 56111) ரயில் மண் சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இதேபோல் திருச்சியிலிருந்து அரியலூர் வரும் பல்லவன் ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும், சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் விழுப்புரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் 5 பேர், சுரங்கபாதை ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து மண் சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் அந்த வழியாக ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் அனைத்து ரயில்களும் 45 முதல் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.