அரியலூர்: அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இத்திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் கொண்ட பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோயிலாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்களின் நிதி உதவியுடன் 15 அடி அகலம், 15 அடி உயரம், 15 டன் எடையுமுள்ள புதிய திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. பெருமாளின் அவதாரங்கள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட கடவுள்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட புதிய திருத்தர் ரதபிரதிஷ்டை கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
கோயிலின் தென்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தஞ்சாவூர் சாலை, வெள்ளாளர் தெரு, மங்காய் பிள்ளையார் கோவில் தெரு வழியாக பழைய தேரடியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணன் கோயிலில் திருத்தேர் ரத பிரதிஷ்டை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கிருஷ்ணன் கோயிலில் நிலை நிறுத்தினர். பின்னர் திருத்தேருக்கு தீபாராதணை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைக்கிறார் இதில் கலெக்டர், எம்.எல். ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தேர் வெள்ளோட்டத்திற்கான பணிகளை இந்து சமய அறநிலையத் துறையினர் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.