அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக்கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்பி மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்பி நேற்று நேரில் ஆஜரானார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகும்படி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேரில் ஆஜராகி ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தேன். அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி அடுத்தடுத்த வாய்தாக்களில் பங்கேற்க நீதிபதி ஆணையிட்டு இருக்கிறார். இதுபோன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது உடனடியாக தமிழக அரசு அவர் தங்கி இருக்கிற இல்லத்திற்கு பாதுகாப்பு அளித்து இருப்பதை வரவேற்கிறோம் என்றார்.