Tuesday, July 23, 2024
Home » மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

by Lavanya

‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்றொரு பழமொழி உண்டு. மேல்தட்டோ, நடுத்தரமோ, கீழ்த்தட்டோ… யாருக்குமே இந்த இரண்டும் கொஞ்சம் தடதடக்க வைக்கும் விஷயம்தான். சொத்து, சுகம் எது அமைய வேண்டுமென்றாலும், உங்கள் ராசிக்கு அதிபதியும், உங்கள் ஜாதகத்திலுள்ள லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருப்பது அவசியம். அவர்களே உங்கள் வசதியைத் தீர்மானிக்கிறார்கள். எனவே, இந்த அம்சத்தை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. முதலில் மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். பிறகு மேஷ ராசிக்குள் வரும் நட்சத்திரங்களுக்கு எவ்வாறு வீடு அமையும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.மேஷத்திற்கு அதிபதியே பூமிகாரகனான செவ்வாய்தான். மேஷத்தை பூமிபுத்திரன் என்றே சொல்லலாம்.

இவர்களிடம், ‘‘உங்க லைஃப் ஆம்பிஷன் என்ன’’ என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘‘முதல்ல சொந்த சம்பாத்தியத்துல ஒரு வீடு கட்டணும்’’ என்பார்கள். இந்த ராசிக்காரர்களின் முதல் செலவே, வீடாகத்தான் இருக்கும். வீடு பற்றிய இவர்களின் ரசனை சற்று பிரமாண்டமாகத்தான் இருக்கும். எல்லாவற்றிலுமே மெட்டீரியல் நன்றாக அமைய வேண்டுமென்று விரும்புவார்கள். பேருந்தில் அறிமுகமாகும் பக்கத்து சீட்டு நண்பரிடம்கூட, ‘‘உங்க ஊர்ல கிரவுண்ட் என்ன ரேட்டுக்கு போகுது’’ என்று விசாரித்து வைப்பார்கள். ‘பர்மா தேக்குல உத்தரம், ரங்கூன் தேக்குல தலைவாசல், பிரெஞ்ச் விண்டோ, டியுப்ளக்ஸ் மாடல் வீடு’ என்று காஸ்ட்லி கனவு காணுவார்கள். சமையலறையும், படுக்கையறையும் பெரிதாக அமைய வேண்டுமென்று நினைப்பார்கள். ‘‘ஒண்டுக் குடித்தனத்துலதான் அவ்ளோ கஷ்டப்பட்டோம்.

இப்போவாவது கொஞ்சம் பெரிசா கட்டுவோமே’’ என்பார்கள். அறைக்குள் சூரிய வெளிச்சம் வரவே விரும்புவார்கள். ‘‘ஏன் கதவை மூடியே வைக்கறீங்க’’ என்று வீட்டில் கடிந்து கொள்வார்கள். நீங்கள் வசிப்பது எந்த ஊராக இருப்பினும், ஊரின் தெற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதியில் வீடு கட்டி செட்டில் ஆக முடியுமா என்று பாருங்கள். அது விருத்தியைக் கொடுக்கும். மேஷராசிக்கு செம்மண் பூமியாக இருப்பின் நல்லது. அல்லது மணல் பூமியாக இருந்தாலும் நலம் பயக்கும். பூமிக்கும் உடம்புக்கும் சம்பந்தமுண்டு. செம்மண் பூமி அமைந்து விட்டால் எப்போதும் ஆரோக்யத்திற்கு குறை வராது. மேலும், அதிகாரம் மிகுந்த பதவிகள் தேடி வரும். நாடாள்பவரின் நட்பெல்லாம்கூடக் கிடைக்கும்.நீங்கள் எந்த ராசி மற்றும் எந்த லக்னமாக இருந்தாலும் சரி… உங்கள் ராசிக்கு நான்காம் வீடுதான் உங்களின் வீடு கட்டும் விஷயத்தைத் தீர்மானிக்கின்றது. மேஷ ராசிக்கு நான்காவது வீடாக கடகம் வருகிறது. அந்த கடக ராசிக்குஅதிபதியாக சந்திரன் வருகிறார். அப்படிப் பார்க்கும்போது நீங்கள் வளர்பிறைச் சந்திரனில் பிறந்திருந்தால், வீடு கட்டுவது எளிதான காரியமாகும். ‘‘லோன் அப்ளை பண்ண ஒரு வாரத்துக்குள்ள எல்லா விஷயங்களும் முடிஞ்சுடுச்சு’’ என்பீர்கள். இதே நீங்கள் தேய்பிறை சந்திரனில் பிறந்திருந்தால் கொஞ்சம் போராடித்தான் வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். குருவும் சந்திரனும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால், அல்லது குருவின் பார்வை இருந்தால், ‘‘ஏதோ ஒரு தைரியத்துல ஆரம்பிச்சேன்.

படபடன்னு எல்லாரும் கொடுத்து உதவினாங்க. போன்லதான் கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிட்டேன். ஒரு வருஷம் பேசாம இருந்த தங்கைகூட அன்னிக்கு வந்தா’’ என்று பிரிந்த உறவினர்களைக்கூட இந்த கிரக அமைப்புகள் சேர்த்து வைக்கும். ‘‘அந்தத் தெருவுலயே அவரு வீடுதாங்க பிரமாதம்’’ என்று மற்றவர்கள் வியப்பார்கள். மேஷராசிக்கு தெற்கு பார்த்த வாசலாக வீடு இருப்பது நல்லது. கிழக்கு வாசல் வீடு என்பது, இரண்டாவது சாய்ஸாக இருக்கட்டும். அபார்ட்மென்ட்டாக இருந்தால் தரைத் தளம் நல்லது. ஆனால், மேலே சொன்னவை மேஷத்திற்கான பொதுவான விஷயங்களாகும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு தரைத் தளம் தவிர மற்றவை எல்லாமும் ஏற்றது. ஏனெனில், கேதுவின் ஆதிக்கமாக அஸ்வினி இருப்பதால் தரையில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி மேலேயே இருப்பது நல்லது. வடகிழக்கு பார்த்த வாசல் வைப்பது நல்லது. எப்போதுமே கடன் வாங்கத் தயங்குவீர்கள்.

அப்படி தயங்காமல் முதல் கடன் வீட்டுக் கடனாக வாங்குவது நல்லது. ‘பத்து லட்ச ரூபாய் சேர்ந்திருக்கு. இன்னொரு பத்து லட்சம் சேர்த்துட்டு லோன் வாங்காம வீடு வாங்கிடலாம்னு பார்க்கறேன்’ என்று தயாராகும்போதே சேமித்த பத்து லட்சமும் கரையத் தொடங்கும். அதனால் கொஞ்சம் சேரும்போதே இடத்துக்கோ, வீடு வாங்குவதற்கோ ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. அதற்குப் பிறகு வங்கிக் கடனுக்கு முயற்சி செய்யுங்கள்.வழிபாட்டுத் தலம், மருத்துவமனை இவற்றிற்கு அருகில் வீடு அமையும். சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில், ‘‘பெருசா இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு சின்ன இடம் இருந்தா போதும். முதல்ல இந்த வாடகை வீட்டுப் பிரச்னையைத் தீர்த்துடணும்’’ என்றுதான் தொடங்குவீர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறும். ‘பசங்க படிக்கறதுக்கு ஒரு ரூம் வேணுமே’ என்று வீட்டை விரிவுபடுத்துவீர்கள். ஆனால், உங்களில் நிறைய பேருக்கு முதல் சொத்து தங்குவதில்லை.

முதல் சொத்தை விற்றுத்தான் காலமெல்லாம் தங்கும் இன்னொரு சொத்தை வாங்கிப் போடுவீர்கள். இருந்தாலும் முதல் வீட்டைப்பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பீர்கள். முப்பது வயதுக்குள் ஏதாவது ஒரு சொந்த இடம் வாங்கிப் போடுவீர்கள். ஆனாலும், 37லிருந்து 46க்குள்தான் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த வயதில் வாங்கிப் போடும் இடம் மற்றும் அசையா சொத்துக்கள் எல்லாமுமே பரம்பரையாக நிலைத்து நிற்கும். மூதாதையர்கள் சொத்துக்கள் கொஞ்சம் போராட்டத்திற்குப் பிறகுதான் கிடைக்கும். ஆனால், தாய்வழிச் சொத்துக்களோ தடங்கல் இல்லாது வரும். அஸ்வினிக்கு என் அனுபவத்தைப் பொறுத்த அளவில் பூர்வீகச் சொத்து தங்குவதில்லை. ‘‘அதைக் கொடுத்துட்டுத்தாங்க அடையாளமா இந்த வீட்டை வாங்கினேன்’’ என்பார்கள். சொந்த ஊரை விட வந்த ஊரில்தான் சொத்து வாங்கும் யோகம் இருக்கும். ஆனாலும், சொந்த ஊருக்கு அருகிலேயே, ‘‘ஒரு ஆயிரம் சதுரடியாவது சொந்தமா வாங்கணும்’’ என்று குறியாக அலைவீர்கள்.

‘‘எங்க அப்பா இங்கயே சுத்திக்கிட்டிருப்பாரு. டேய், நல்ல மண்ணுடா இதுன்னு புலம்பினாரு’’ என்பீர்கள். உங்களுக்கு வேலை ஒரு இடம்; வீடு ஒரு இடம் என்பதெல்லாம் சரியாக வராது. ‘‘ஆபீஸ்லேர்ந்து நடந்தா பத்து நிமிஷத்துல வீடு இருக்கணும்’’ என்பீர்கள். குழந்தைகளை அலையவிட மாட்டீர்கள்.மேஷ ராசியிலேயே இருக்கும் பரணி நட்சத்திரக்காரர்கள் ஏனோதானோ என்று எளிமையாக வீடு வாங்கிவிட மாட்டீர்கள். ‘‘வீடு நல்லாயிருக்கு. ஆனா, தெரு சரியில்லை’’ என்பீர்கள். ‘‘கொஞ்சம் சந்துக்குள்ள போய் திரும்ப வேண்டியதா இருக்கு. சதுர அடிக்கு அம்பது குறைச்சா கூட இந்த இடம் வேண்டாம்’’ என்பீர்கள். ‘‘இப்படியே நொட்டை சொல்லிக்கிட்டிருங்க. நாம வீடு பார்க்க ஆரம்பிக்கும்போதே சதுர அடி ரெண்டாயிரத்து ஐநூறு ரூபா இருந்தது. இப்போ நாலாயிரம். எப்படியும் எட்டாயிரம் ரூபாய்க்கு வரும்போதுதான் வாங்குவீங்க போலிருக்கு’’ என்று குடும்பத் தலைவி குத்திக் காட்டினாலும் அசர மாட்டீர்கள்.

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

எல்லாம் ராசியாதிபதி சுக்கிரனின் வேலைதான். பொதுவாகவே பரணி நட்சத்திரக்காரர்கள் சுற்றுப் புறம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். விசாலமான தெருக்களை விரும்புவீர்கள். ‘‘சார்.. இது வி.ஐ.பிங்க ஏரியா. எந்த பிரச்னையும் வராது. தெருமுனையிலதான் அந்த நடிகர் வீடு இருக்கு. பக்கத்து பில்டிங்ல கார் ஷோரூம். அட்ரஸ் கண்டு பிடிக்கறதும் ரொம்ப ஈசி’’ என்று அலம்பல் விடுவீர்கள். ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, வேறொரு இடம் பார்க்கச் சென்று விடுவீர்கள். தனி வீட்டைத்தான் மிகவும் விரும்புவீர்கள். தென் கிழக்கு வாசல் பார்த்து வீடு அமைந்தால் அதிர்ஷ்டம் உண்டு. உங்களுக்கு எந்த தளமாக இருந்தாலும் பரவாயில்லை.

எப்போதுமே வீட்டின் முகப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தோட்டத்திற்கு இடமே இல்லையென்றாலும் தொங்கும் தொட்டிகளில் செடிகளை வைத்துப் பராமரிப்பீர்கள். வீடு முழுவதும் கண்ணாடி பதித்தாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு கண்ணாடி அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பொதுவாக நவராத்திரி அன்றுதான் கொலு வைப்பார்கள். ஆனால், நீங்களோ எப்போதும் கொலுவைத்தாற்போல அலமாரி முழுவதும் பொம்மைகளை அடுக்கிய படி இருப்பீர்கள். ‘கட்டினா இந்த மாதிரி வீடு கட்டணும்’ என்று வீடு கட்டும் விஷயத்தைத் தள்ளிப் போடுவீர்கள். எனவே, நீங்கள் உடனே வீடு கட்டிக் குடியேறுவது நல்லது. மேஸ்திரி, கொத்தனாருக்கு கொடுக்கும் பணத்தை விட ஆர்க்கிடெக்டிற்கே அதிகம் செலவழிப்பீர்கள். உங்களின் 37லிருந்து 42வது வயதுக்குள் நல்ல வீடு கட்டி விடுவீர்கள்.

தனக் கென்று வீடு அமைந்து விட்டால் பூர்வீகச் சொத்தை விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டீர்கள். ‘‘எனக்குத்தான் ஒரு வீடு இருக்கே. நீ வேணா எடுத்துக்கோ’’ என்று உடன்பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் வங்கிக் கடனெல்லாம் எளிதாகக் கிடைத்துவிடும். அடுத்து மேஷராசியில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்வீர்கள். மனதிலேயே கோட்டை கட்டி அதைநோக்கியே வேலை முதற்கொண்டு பல விஷயங்களை பார்த்துப் பார்த்து செய்வீர்கள்.ஆனால், எதையுமே வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு பக்கம் தலைவாசலை வைத்து வீடு கட்டுவது நல்லது. சொந்த ஊரிலுள்ள வீட்டையும் அடிக்கடி பார்த்து வருவீர்கள். அவ்வளவு சீக்கிரம் விற்க மாட்டீர்கள். உங்களால் வாடகை வீட்டில் வெகுகாலம் வசிக்க முடியாது.

30லிருந்து 34 வயதுக்குள் சொந்த வீட்டுக்கான வேலையைத் தொடங்குவது நல்லது. அதற்குப் பிறகு நிச்சயம் 46வது வயதில் இன்னும் சில வீடுகள் வாங்கிப் போடுவீர்கள். மேஷராசியிலேயே கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் இல்லக் கனவைப்பற்றி கவலையே கொள்ள வேண்டாம். மேஷத்திற்கு நான்காம் இடமான வீட்டை வழங்கும் கடக ராசியின் அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்கள் ஜாதகத்திலும் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால்தான் வீடு கட்டவே முடியும். அப்படியே சந்திரன் பலவீனமாக அமைந்தாலும் கவலைப்படாதீர்கள். சந்திரனை பலப்படுத்தும் சக்தி அம்பாளுக்கு உண்டு. கடகம் என்பதே கடல் வீடு. அப்போது கடலுக்கு அருகேயே இருக்கும் அம்பாள், உங்களுக்கு இன்னும் அதிகமான நன்மையைச் செய்வாள். அப்படி இரு அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற தலமே கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி பகவதியை வேண்டுதலோடு தரிசித்து வர, விரைவில் வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

 

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi