புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ வெளியிட்டுள்ளது. முதல்வர் சைனி, லத்வா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு அக்.5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அக்.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு முதற்கட்டமாக 67 தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ நேற்று வெளியிட்டுள்ளது.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இதே போல் அரியானா பாஜ முன்னாள் தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் பட்லி தொகுதியிலும், மூத்த தலைவர் அனில் விஜ் அம்பாலா கான்ட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவ், அடேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.