சென்னை: தி.நகரில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள காதலர்களுக்கிடையே திடீரென ஏற்பட்ட கருத்து மோததால், செவிலியரை சாலையிலேயே ஓட ஓட போதை காதலன் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் இருந்து கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகாளாக சதீஷ்குமார் மற்றும் செல்வராஜ் குடும்பத்தினர் வந்தனர். அவர்கள், தமிழக அரசு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையம் முள்ளிக்காடு இலங்கை முகாமல் தங்க வைக்கப்பட்டனர். சதீஷ்குமாருக்கு சஞ்சய் (22) என்ற மகன் உள்ளார். அதேபோல் செல்வராஜிக்கு ஜனனி (24) உள்ளார். ஜனனி செவிலியர் படிப்பு முடித்துள்ளார். ஜனனியின் அக்கா கணவர் அலெக்சாண்டர் சென்னை மண்ணிவாக்கத்தில் ஹோம் கேர் நடத்தி வருகிறார். இதனால் செவிலியரான ஜனனி ஹோம் கேரில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அகதிகள் முகாம்களில் இருக்கும் போதே ஜனனி மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் காதலித்து வருகின்றனர். ஜனனியின் அக்கா கணவர் அலெக்சாண்டரின் அக்கா மகன் சஞ்சய் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனது காதலியை சஞ்சய் நேற்று முன்தினம் பார்க்க, ஜனனி தோழிகளுடன் தங்கியுள்ள தி.நகர் புஷ்பாவதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். சஞ்சய் குடிபோதையில் இருந்ததால், ஜனனி தனது காதலனை மேட்லி சப்வே அருகே அழைத்து வந்து பேசியுள்ளார். அப்போது ஜனனியை வெளியே செல்லலாம் என்று சஞ்சய் அழைத்துள்ளார். அதற்கு இன்று வேண்டாம் நாளை செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சஞ்சய் சாலைலேயே ஜனனியை கண்மூடி தனமாக தாக்கினார். ஒரு கட்டத்தில் ஜனனியை ஓட ஓட அடித்துள்ளார். இதில் வலி தங்க முடியாமல் ஜனனி உதவி கேட்டு அலறினார். இதை கவனித்த பொதுமக்கள் போதையில் இருந்த காதலன் சஞ்சயை பிடித்துவைத்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி எஸ்ஐ பாபு சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து போதையில் இருந்த சஞ்சயை மீட்டார். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் காதலர்கள் மற்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தெரிந்ததும், போலீசார் இருவரும் பொது இடங்களில் இதுபோன்ற நடக்க கூடாது என்று கடுமையாக எச்சரித்தும், உறவினரான அலெக்சாண்டரை வரவழைத்து இருவரும் அனுப்பி வைத்தனர். பொது இடத்தில் காதலியை காதலன் ஓட ஓட அடித்து உதைத்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.