பியூனாஸ் அயர்ஸ்: பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலே இடையேயான பேச்சுவார்த்தையில், பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டிரினிடாட் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 3ம் கட்டமாக அர்ஜென்டினாவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அர்ஜென்டினா தலைநகர் பியூனாஸ் அயர்ஸின் எஸீசா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் 2ம் நாளாக நேற்று பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு, கலாச்சாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்துடன் அர்ஜென்டினா பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, சுற்றுப்பயணத்தின் 4ம் கட்டமாக பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்றும் நாளையும் 2 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.