?யாகம், யக்ஞம் இரண்டும் ஒன்றுதானா?
– மல்லிகா அன்பழகன், சென்னை.
யாகம், யக்ஞம் இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத் தரக்கூடியவை. அதே நேரத்தில் இரண்டிற்கும் சிறிது வித்தியாசம் என்பதும் உண்டு. யஜ் என்றால் வழிபடுவது என்று பொருள். எவன் ஒருவன் பொருளை தக்ஷிணையாகத் தந்து தனக்கான வழிபாட்டினை யக்ஞத்தின் மூலமாக மேற்கொள்கிறானோ அவனுக்கே யஜமானன் என்று பெயர். சம்பளம் தருகின்ற முதலாளியை எஜமான் என்று அழைப்பது கூட இதிலிருந்து தோன்றிய வார்த்தைதான். யாகம் என்பது தனக்காக மட்டுமல்லாது உலகநன்மைக்காகவும் இந்த உலகில் வாழுகின்ற ஜீவராசிகளின் நலன்களை முன்னிட்டும் செய்யப்படுகின்ற மாபெரும் யக்ஞங்கள் ஆகும். அரசர்கள் பொருளைத் தந்து யாகங்களை நடத்தியதை படித்திருப்போம். அவர்கள் தங்களுக்காக மட்டும் அல்லாது தன்னுடைய நாட்டு மக்கள் அனைவரின் நலன் கருதி யாகங்களைச் செய்தார்கள். அதே போல ஹோமம் என்பது தனிப்பட்ட மனிதனின் பெயரில் சங்கல்பம் செய்து அவனுடைய தேவைக்காக மட்டும் செய்யப்படுவது ஆகும். ஆக யாகம் யக்ஞம் என்பதற்கும் ஹோமம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் என்பது உண்டு.
?வீட்டின் அருகே நள்ளிரவில் நாய்கள் குரைத்தால் தீய சக்திகளின் நடமாட்டம் உள்ளது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா?
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
நாய்கள் குரைப்பதற்கும் ஊளையிடுவதற்கும் வித்தியாசம் என்பது உண்டு. சாதாரணமாக பகல் நேரத்தில் நாம் கேட்பது போல குரைக்கும் ஒலி இருந்தால் அது மனிதர்களின் நடமாட்டத்தை குறிக்கும். அதே நேரத்தில் ஊளையிடுவதுபோல் குரைத்தால் அது ஏதோ ஒரு அசாதாரணமான விஷயமாகத்தான் இருக்கும். மனிதர்களால் உணர முடியாத விஷயங்களை மிருகங்களால் எளிதில் உணர முடியும். சுனாமி, பூகம்பம் போன்றவைகளையும் மிருகங்களால் முன்கூட்டியே அறிய இயலும். அதுபோலவே எதிர்மறை சக்திகளின் நடமாட்டம் இருந்தால் நாய்கள் ஊளையிடத் துவங்கும். எமதர்மராஜனின் வருகையை கூட நாய்களால் உணர முடியும் என்று சொல்வார்கள். இரவில் நாய்கள் தொடர்ந்து ஊளையிடும் சத்தம் கேட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தோமேயானால் அதே தெருவில் யாரோ ஒருவரின் இல்லத்தில் மரணம் என்பது நிகழ்ந்திருக்கும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துத்தான் பெரியவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். ஆக இந்த கருத்தினை மறுப்பதற்கில்லை என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில் ஆகும்.
?அண்ணனுக்கு முன்பு தம்பிக்கோ அல்லது அக்காவிற்கு முன்பு தங்கைக்கோ திருமணம் செய்வது சரியா?
– அ.யாழினி பர்வதம், சென்னை.
இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. யாருடைய ஜாதகத்தில் திருமண யோகம் என்பது வந்துவிட்டதோ அவர்களுக்கு திருமணத்தை நடத்திவிடலாம். ஒரு சிலருக்கு திருமணமே நடக்காமல் போய்விடுகிறது. அண்ணனுக்கு திருமணமே நடக்கவில்லை என்பதற்காக தம்பியும் அதே போல திருமணமே செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல இயலுமா? இது அவரவர் ஜாதக பலத்தைப் பொறுத்ததுதானே தவிர தர்மசாஸ்திர ரீதியாக இதில் எந்தவிதமான தடையும் இல்லை.
?சில ஆலயங்களில் ராகுகால பூஜை நடத்தப்படுகிறது. இதன் ஐதீகம் என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஒரு நாளின் பகல் பொழுதினை எட்டு பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்தினையும் உண்மைக் கோள்கள் ஆன சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களுக்கும் பிரித்துத் தந்தது போக மீதம் உள்ள ஒரு பாகத்தினை ராகு-கேதுக்களுக்கு அளித்து அந்த நேரத்தினை ராகுகாலம் என்ற பெயரில் அழைக்கிறார்கள். பெரும்பாலும் நமக்கு உண்டாகக்கூடிய பிரச்னைகளுக்கு இந்த இரண்டு நிழல் கிரஹங்களே காரணமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய பரிகாரத்தை அவர்களுக்கு உரிய நேரமான ராகுகாலத்தில் செய்கிறார்கள். பெரும்பாலும் ஆலயங்களில் துர்கை, சரபேஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கே இந்த ராகுகால பூஜை ஆனது நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளில் கலந்துகொள்வதன் மூலம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் பலமும் மன உறுதியும் கிடைக்கும் என்பதே இதற்கான தாத்பரியம் ஆகும்.
?கருங்காலி மாலை அணிந்தால் மறுநாளே பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே, இது உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.
இல்லை. இந்த கூற்றினில் உண்மை என்பது இருந்தால் எல்லோருமே கருங்காலி மாலைகளை அணிந்துகொண்டு மறுநாளே பலன் பெற்றுவிடலாமே. அதனை விற்பவர்களுக்கு வேண்டுமானால் உடனடியாக பலன் கிடைக்கலாம். அணிந்துகொள்பவர்களுக்கு அல்ல. கருங்காலி மாலை என்பது ஒரு அலங்காரப் பொருள்தானே அன்றி இதனால் பலன் கிடைக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் இல்லை. ருத்ராட்சம் மற்றும் துளசி மணி மாலையை வேண்டுமானால் அணிந்துகொள்ளலாமே தவிர கருங்காலி மாலையைப் பற்றிய குறிப்பு என்பது ஜோதிட நூல்களிலோ அல்லது சாஸ்திர நூல்களிலோ எங்கும் காணப்படவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
?வீட்டுப் பூஜையறையில் எவர்சில்வர், இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தலாமா?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
கூடாது. பித்தளை, தாமிரம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துவதே நல்லது.
?அர்ச்சனை செய்யும்போது சிலர் சுவாமி பெயருக்கே செய்கிறார்களே அப்படி செய்யலாமா?
– டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
ஆலயத்தில் அர்ச்சனை என்பது உலகநன்மையை வேண்டி ஒவ்வொரு கால பூஜையிலும் செய்யப்பட வேண்டியது ஆகும். சுவாமி பெயரில் அர்ச்சனை என்றால் சுவாமியின் பெயர் நட்சத்திரம் மற்றும் ராசியைச் சொல்லி செய்யப்படுவது அல்ல. அந்த ஸ்வாமிக்கான அர்ச்சனை என்று பொருள்படும். ஸர்வே ஜனானாம், லோகே ஜனானாம் க்ஷேமஸ்தைர்ய, வீர்ய விஜய, ஆயுர் ஆரோக்ய, ஐஸ்வர்யானாம் அபிவ்ருத்யர்த்தம் என்று அந்த சங்கல்பம் ஆனது வரும். அதாவது உலக மக்கள் யாவரும் ஆரோக்யத்துடனும் தீர்க்காயுளுடனும் சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் பெற்று நல்லபடியாக வாழவேண்டும் என்று உலகத்தாரின் நன்மைக்காக செய்யப்படுவதே இந்த அர்ச்சனை ஆகும். தனிப்பட்ட மனிதனின் பெயரில் அர்ச்சனை செய்வது என்பது ஆகம விதிகளில் காணப்படவில்லை. அரசன் என்பவன் ஆண்டவனின் பிரதிநிதியாக மக்களுக்குச் சேவை செய்ய வந்தவன் என்பதால் அரசனின் பெயரில் அர்ச்சனை செய்ய விதி என்பது உண்டு. அவ்வாறு அந்த அரசனின் பெயரில் செய்யப்படுகின்ற அர்ச்சனையின் பலன் ஆனது பொதுமக்களையே சென்றடையும் என்பதால் அரசனின் பெயரில் அர்ச்சனை செய்தார்கள். ஆக ஆலயங்களில் செய்யப்படுகின்ற அர்ச்சனை என்பது உலக நன்மையை வேண்டியே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.