காபி உள்ளிட்ட கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்களில் உள்ள காஃபின் என்னும் மூலப்பொருள் உங்களின் ஆற்றல் நிலைகளை அதிகரிக்கச் செய்வதோடு, உங்களின் சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச்சூழலில் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. காஃபின் என்பது காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்கள் போன்ற பானங்களில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இது உலகளவில் உள்ள மக்கள் மிகவும் பரவலாக குடிக்கும் பானங்களில் ஒன்றாக கலந்துள்ளது.
இது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் சிறந்த அனுபவமுள்ள மருத்துவ நிபுணராகவும், பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து அதற்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில் சிறப்புமிக்க உள் மருத்துவ பிரிவு டாக்டருமான ஸ்பூர்த்தி அருண் கூறுகையில், ‘‘இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ள சூழலில் காஃபின் உள்ள பானங்களை தங்கள் குழந்தைகள் குடிப்பதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற மனக்குழப்பத்தில் பெற்றோர்கள் உள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதை குடிக்கும்போது, அது அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது’’ என்று தெரிவித்தார்.
‘‘காஃபின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். இது முறையான தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். மேலும் சரியான தூக்கம் இல்லாத குழந்தைகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு வகுப்பில் அவர்களால் பாடத்தை கவனமாக படிக்க முடியாது.
காஃபின் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படுவதோடு, அது அவர்களுக்குள் ஒரு வித பதட்டத்தை அதிகரிக்கும். இது அவர்களின் மனநிலையை மோசமாக்கும்’’ என்று கூறியவர், ‘‘இளைஞர்களை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் அளவு காஃபின் கலந்த பானங்கள் அதாவது காபி அல்லது 2 பாட்டில் கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்கலாம்.
ஆனால் அதேசமயம், கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் எனர்ஜி பார் சாக்லேட்களில் சிறிய அளவு காஃபின் மற்றும் அதிக சர்க்கரை இருப்பதால், சர்க்கரை மற்றும் பிற அடிமையாக்கும் பொருட்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த பொருட்களை தொடர்ந்து சாப்பிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றும் எச்சரித்தார்.
‘‘காஃபின் அதிகம் உள்ள சோடா, ஐஸ் டீ, புத்துணர்ச்சி பானங்கள் போன்றவற்றை தவிர்த்து தண்ணீர், பால், ஹெர்பல் டீ போன்றவற்றை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது’’ என்றும் ஸ்பூர்த்தி அருண் ஆலோசனை அளித்தார்.
தொகுப்பு: நிஷா