‘அர்த்த’ என்பதற்கு ‘பாதி’ என்ற பொருளுண்டு. ‘நாரி’ என்பதற்கு ‘பெண்’ என்ற பொருளுண்டு. பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் உள்ளதையே ‘அர்த்தநாரி’ எனக் குறிப்பிடுகின்றது. இவ்வுலகமானது முழுமையடைய வேண்டுமானால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்கும் இரண்டு சக்திகளான ஆளுகின்ற குணம்கொண்ட ஆண்சக்தியும் ஈர்க்கின்ற குணம் கொண்ட பெண் சக்தி யும் இருந்தால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக இருக்க முடியும் என்பது அர்த்தநாரீஸ்வரரின் தத்துவமாகும். ஆளுகின்ற குணங்கள் மட்டும் உள்ளவன் எப்பொழுதும் சச்சரவுகளையும் அழகியல் குணங்கள் மட்டும் உள்ளவன் எப்பொழுதும் சங்கடங்களையும் சந்திக்கச் செய்யும். இரு குணங்கள் நிரப்பப் பெற்றவன்தான் வெற்றியாளனாக இருக்கிறான்.அவ்வாறே, நவகிரகங்கள் ஆண் என்றும் பெண் என்றும் திருநங்கை உடையது என்றும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இடது பக்கம், வலது பக்கம் என்றும் இரண்டிலும் உள்ள நடுத்தன்மை என்றும் உள்ளது. பொதுவாகவே இடது நாசியின் சுவாசத்தை பெண் தன்மையுடனும் வலது நாசியின் சுவாசத்தை ஆண் தன்மையுடன் ஒப்பிடுவர். இந்த இரண்டு நாசிகளிலும் நடவாமல் நடுவில் உள்ள சுழுமுனையுடன் நடக்கும் சுவாசத்தை தியானம் பெருமை மிக்க சுவாசமாக சொல்கிறது. அந்த சுவாசத்தின் வழியாகவே குண்டலினி என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு உயிருக்குள்ளும் உறங்கும் ஜீவசக்தியானது மேல்நோக்கிச் செல்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சுவாசமானது ஆண், பெண் இருவரின் தாம்பத்தியத்தில் நடக்குமேயானால் அப்பொழுது பிறக்கும் குழந்தை திருநங்கையாக பிறப் பெடுக்கிறது என சாஸ்திரங்களும் மருத்துவச் சிந்தாந்தங்களும் சொல்கிறது.
கிரகங்களும் அதன் பிரிவுகளும்:
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களையும் ஆண் கிரகங்கள் என்று சொல்வர். காரணம், இந்த கிரகங்கள் மட்டுமே பல ஆளுமைத் திறமைகளையும் அதன் மூலம் மற்றவற்றை இயக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. எனவே, இது ஆண் கிரகமாக உள்ளது. சுக்கிரன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் பெண் கிரகங்கள் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இவைகளுக்கு ஆளுமைத் தன்மை இருக்காது. ஆனால், அழகியல் தன்மையும் வசீகரத்தன்மையும் இருப்பதால் இதனை பெண் கிரகங்களாக வலியுறுத்தப்படுகிறது. புதன், சனி ஆகிய கிரகங்கள் சில நேரங்களில் ஆளுமைத் தன்மையாகவும் சில நேரங்களில் ஆளுமைத் தன்மை அற்றதாகவும் உள்ளதால் இதனை அலிகிரகங்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நரம்பு களின் கோள்கள் என்றால் மிகையில்லை. அலிகிரகங்கள் மட்டுமே அன்பிற்கு அடையாளங்களாகவும் தாயைப் போன்ற குண முடையதாகவும் உள்ளது. ராகு என்ற சாயா கிரகம் எப்பொழுதும் அலித்தன்மையுடைய கிரகங்களுக்குச் சாதகமாகவே உள்ளது.
புராணம் மற்றும் இதிகாசங்களில் திருநங்கை அவதாரங்கள்
புராணங்களில் விஷ்ணு தூதுவராகவும் பெண் வேடமணிந்துகொண்ட
திருநங்கையாகவும் காட்சி அளிக்கிறார். அதனால் மோகினி ரூபன் என்ற பட்டத்தையும் அவர் கொண்டுள்ளார். மோகினி என்பது அழகை ஈர்க்கும் தன்மை கொண்ட அழகாகும். ஐயப்பனின் அவதாரமே சிவனும் மோகினி ரூபம் கொண்ட பெருமாளும் இணைந்ததால் உருவானதாகும். அதுபோலவே, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கப்பட்ட பொழுது அந்த அமிர்தத்தைப் பரிமாறுவதற்கு விஷ்ணுவே முற்பட்டார். அவ்வாறு அவர் பரிமாறும் பொழுதும் மோகினியாக வந்தார் என்று சொல்கிறது புராணங்கள். இன்னும் தெய்வங்களில் இவர் அழகிற்கு இணை யாருமில்லை என்றே புராணங்களும் இதிகாசங்களும் வர்ணிக்கின்றன. அழகின் தன்மையால் அவ்வாறு சொல்லப்படுகிறது. நவகிரகங்களில் புதன் கிரகத்திற்கு அதிதேவதை விஷ்ணுவே ஆவார்.மகாபாரதத்தில் வனவாசம் முடிந்து ஒரு வருட அஞ்ஞான வாசத்தின் போது அர்ச்சுனன் நாகலோக இளவரசி உலூபியை மணக்கிறார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அரவான். மகாபாரதப் போரில் வெற்றி பெறுவதற்கு தன்னை அர்ப்பணித்தவனே அரவான். இவன் இறப்பதற்கு முன் அர்ச்சுனனிடம் இரண்டு வரங்கள் கேட்டுப் பெறுகிறான். தன்னை கொல்பவன் வீரனாக இருக்க வேண்டும் என்றும் மரணத்திற்கு முன் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்றான். அவ்வாறே, மரணத்திற்கு முன் கிருஷ்ணரின் பெண் வடிவமான மோகினி அவதாரத்தில் அரவானை மணக்கிறார். அவ்வாறு மணந்து அந்த சமூகத்தில் இருந்துதான் திருநங்கைகள் குலம் வந்ததாக நம்பப்
படுகிறது.மகாபாரதத்தில் வரும் மற்றொரு நபர் சிகண்டி. முன்பு அம்பா என்னும் பெயர் கொண்ட இளவரசியாகி பின்பு இவர் மறுபிறப்பு எடுத்து சிகண்டினியாக மாறி பீஷ்மரை வதம் செய்கிறாள். இவளும் திருநங்கை அவதாரமே.
திருநங்கைக்கான ஜாதக அமைப்பு
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் என்று நாம் சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், வியாழன் ஆகியவை வலுவிழந்து. அலிகிரகங்களான புதன் மற்றும் சனி அதிக ஆதிக்கத்தைப் பெறும்பொழுது ஒருவர் திருநங்கையாக மாறுவார் என்றும், ஆண் மற்றும் பெண் போன்ற குணங்களைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இதில், ஆண் ஜாதகருக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் வலிமையாக இருக்கப் பெறின் பெண் தன்மையாக மாறுவார் என்றும் இதில் பெண் ஜாதகருக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் வலிமை குறைந்து காணப்பட்டு ஆண் கிரகங்களில் ஏதேனும் ஒன்று வலிமையாக இருக்கப் பெறின் ஆணாக மாறுவார் என்றும் ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
ஒருவர் எப்பொழுது திருநங்கையாக மாறுவார்
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் பதின்ம பருவத்தில் நளினமாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இயற்கையின் அமைப்பில் செதுக்கப்படுகின்றான். அவ்வாறு மாறுவதற்கு நரம்பு மற்றும் ஹார்மோன் கிரகங்களான சனி மற்றும் புதன் காரண கர்த்தாவாக இருக்கிறான். இந்த கிரகங்கள் வலிமையாக இருக்கும்பொழுது உடலில் மாற்றங்கள் தோன்றுகின்றன. அதற்குரிய திசா மற்றும் புத்திகள் ஏற்படும் பொழுது இந்த மாற்றம் வலிமையாக நடைபெறுகிறது என்பதே உண்மை. சிலர் ஆணாக இருந்தாலும், உடல் நளினங்களில் பெண்ணாக இருக்கப்பெறுவர். அதற்கு காரணம் சனி மற்றும் புதன் பரிவர்த்தனை பெற்று இருக்கலாம். சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமையாக இருக்கும். அது போலவே, சிலர் பெண்ணாக இருந்தாலும் உடல்மொழி மற்றும் பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஆண் தன்மையாக இருக்கும். இவர்களுக்கு ஆண் கிரகங்கள் வலிமையாக இருந்து, புதன் மற்றும் சனி இணைந்தோ பரிவர்த்தனை பெற்றிருக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
திருநங்கைகள் வழிபடும் சிறந்த ஸ்தலம் எது?
திருநங்கைகள் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் மற்றும் இரவும் பகலும் சந்திக்கின்ற வேளையில் அதாவது, மாலை 4 மணி முதல் 6 மணி வரை அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சாலச்சிறந்தது. மோகினி அவதாரத்தில் உள்ள பெருமாளை சனிக்கிழமையும், புதன்கிழமையும் தரிசிப்பது இவர்களுக்கு வாழ்வில் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கும். மோகினி அவதாரத்தில் காட்சித் தரும் பெருமாள் கோவாவில் உள்ள மர்டேல் என்ற ஊரில் மங்கேஷ் என்ற இடத்தில் காட்சியளிக்கிறார்.
ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்