ஆற்காடு: ஆற்காடு அருகே மாந்தோப்பில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் முந்திரிகாடு பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி சுசிலா (80). தனது மாந்தோப்பில் உள்ள வீட்டில் மகன் சிவக்குமார் மற்றும் மருமகள் லோகலட்சுமியுடன் வசித்து வந்தார். சிவக்குமார் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்ததால், தனது மருமகளுடன் மாந்தோப்பில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுசீலா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடியை சேர்ந்த நந்தகுமார் (19) என்ற வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் அங்கு வந்துள்ளார். பின்னர், தோப்பில் உள்ள வீட்டில் இருந்த சுசிலாவிடம் ரகளையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சுசிலா அலறி கூச்சலிட்டப்படி தப்பியோடியுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மூதாட்டியை நந்தகுமார் தரதரவென இழுத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில், மூதாட்டி சுசிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே நந்தகுமார் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருமகள் லோகலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.