திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்.6ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் சுடு மண்ணால் செய்த விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்த நெசவு தக்களிகள், ஆட்டக்காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக்கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் நடந்து வரும் நான்காம் கட்ட புதைவிட அகழாய்வில் 10 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட அகழாய்வு குழியில் 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளன.