திருவள்ளூர்: திருவள்ளுர் அருகே அரண்வாயல் திருவிக தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அங்கன்வாடி பள்ளி, அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே பகுதியில் உள்ள ஆமைகுட்டை அருகே தனியார் செல்போன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தொடர்ந்து இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி உதவி ஆணையர் ரவிக்குமார், செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணா ஆகியோர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள் தரப்பில், செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவாய் கோட்டாட்சியர், கலெக்டர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். பொது மக்களிடம் எதிர்ப்பு வலுத்ததால் கலெக்டரை நேரில் சந்தித்து மீண்டும் மனு அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதன்படி தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.