*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அறந்தாங்கி :அறந்தாங்கி நகராட்சி சாலையில் சுற்றித்தரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நடவடிக்ககை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கியில் இருந்து செல்லும் பிரதான சாலையாக உள்ள பட்டுகோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, பேராவூரணி, ஆவுடையார்கோவில் ஆகிய சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலைகளில் இரவு நேரத்தில் மாடுகள் தூங்குவதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மாட்டின் மீது மோதி உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து நகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மாடுகளை சிறை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.சாலையில் சுற்றிதிரிந்த மாடுகளை சிறை பிடித்து கும்பகோணத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீட்டிலேயே கட்டிவிடுகின்றனர். ஆனால் மீண்டும் தற்போது மாடுகள் சாலையில் சுற்றி திரிகிறது. நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இரவு படுத்து கொண்டது. இதனால் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பேருந்து நடத்துனர். ஹாரன் அடித்தும் மாடுகள் போகவில்லை ஒதுங்கவில்லை
இதன் பின்னர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கம்பால் மாடுகளை விரட்டினர். தற்போது பண்டிகை காலம் என்பதால் சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இதனால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி நிர்வாகம், வருவாய்துறை, போலீசார் உள்ளிட்டோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இரவு நேரங்களில் சாலையில் தூங்கும் மாடுகள் சாலையில் வாகனம் சென்றதும், வாகன சத்தத்தில் திடீரென சாலையில் குதித்து விழுந்து ஓடுகிறது.
இதனால் இருசக்கர வாகன ஒட்டுனர்கள் நாள்தோறும் கீழே விழுந்து காயம்பட்டு செல்கின்றனர். இதனால் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள சாலைகளில் சுற்றிதிரியும், தூங்கும் மாடுகளை சிறைபிடிக்க வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.