ஆரணி : ஆரணி அருகே தனியார் பள்ளி பஸ் மோதியதில் வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக டிரைவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு பழைய காலனி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவா(50), மர வியாபாரி. இவரது மனைவி சுஜாதா, இவர்களுக்கு மகன் யோகேஷ்(21), மகள் வைஷ்ணவி(19), ஆகியோர் உள்ளனர்.
இதில், யோகேஷ் பிஎஸ்சி முடித்து விட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு, வேலை தேடி வருகிறார். இந்நிலையில், யோகேஷ் அவரது மொபட்டில் ஆரணியில் இருந்து வேலூருக்கு நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்காக கண்ணமங்கலம் வழியாக ஆரணிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, புதுப்பாளையம் கூட்ரோடு அருகே சென்றபோது ஆரணியில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி வந்த தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த பஸ் எதிர்பாராத விதமாக யோகேஷ் ஓட்டிவந்த மொபாட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட யோகேஷ், அதே இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து யோகேஷின் தந்தை சிவா கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை யோகேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரும்பேடு கூட்ரோடு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா எஸ்ஐகள் அருண்குமார், மகாராணி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை, ஏற்க மறுத்த அவர்கள் தனியார் பள்ளி பஸ்கள் போட்டி, போட்டுக் கொண்டு முண்டியடித்து வேகமாக வந்ததால் தான், யோகேஷ் ஓட்டி வந்த மொபட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.அதனால், யோகேஷ் உயிரிழப்புக்கு காரணமான சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் 2 பஸ்களின் டிரைவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சாலைமறியல் கைவிடமாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
அதைதொடர்ந்து, அங்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜங்கம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.