ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவர் காதலிப்பதாக கூறி பழகினார். இதில் இளம்பெண் கர்ப்பமானதால் காமேஷ் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு காமேஷ் திடீரென பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் இளம்பெண் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும், இளம்பெண்ணுக்கு கல்லூரியில் தேர்வு தொடங்கியதால், அவர் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் என தோழிகளிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இளம்பெண் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள திருநங்கை மது(எ) சரத் என்பவர், குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறினார். இதனால் கடந்த 10ம் தேதி முதல் அவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு இளம்பெண் கல்லூரிக்கு செல்ல தொடங்கினார். இதனிடையே கடந்த 13ம் தேதி தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறிய திருங்கை சரத், அவரை பார்த்துவிட்டு வருவதாகவும், குழந்தையை அழைத்துச்செல்வதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த குழந்தையை காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சரத் காரில் கடத்திச்சென்றார். அதன்பின்னர், இளம்பெண்ணிடம் குழந்தையை ஒப்படைக்காமல் சரத் தட்டிக்கழித்து வந்தார். அவரிடம் குழந்தையை ஒப்படைக்கும்படி இளம்பெண் கேட்டு வந்தார்.
இதேபோல் நேற்றுமுன்தினமும் கேட்டுள்ளார். அதற்கு சரத், `உன் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்றால், எனக்கு ரூ.6 லட்சம் கொடு’ என கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆரணி தாலுகா போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், இளம்பெண்ணின் குழந்தையை திருநங்கை சரத் கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாலுகா போலீசார் நெற்குணத்திற்கு சென்று, சரத்திடமிருந்த குழந்தையை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். மேலும் திருநங்கை சரத்தை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.