Sunday, March 23, 2025
Home » திருமண பாக்கியம் அருளும் அரங்கநாதர்

திருமண பாக்கியம் அருளும் அரங்கநாதர்

by Lavanya

பார் முழுதும் அருள் புரிந்து வரும் திருவரங்கன், திருமால்பாடி என்னுமிடத்தில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்றில், அனந்தசயன கோலத்தில் அடியார்களின் குறைகளைத் தீர்த்து அருளாட்சி நடத்தி வருகிறார். பள்ளிக் கொண்ட கோலத்தில் பரந்தாமன் இங்கு எழுந்தருள புராணக் கதை உள்ளது.

ஸ்ரீ  வேத வியாசரின் மகனான, கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி, திருமால்பாடி குன்றின் மீதமர்ந்து திருமாலை நோக்கி தவமிருந்தார். அவரின் தவத்திற்கு மனமிரங்கிய திருமால் தேவர்களுடன் கூடி அரங்கநாதனாக தரிசனம் தந்து, வேண்டிய வரம் கேட்டார். ரிஷி தனக்கு முக்திப்பேறு வேண்டினார். அதற்கு அரங்கநாதரோ, அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரியும்படியும், ராம அவதாரத்தின் போது லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி மற்றும் அனுமன் புடைசூழ காட்சி தந்து முக்திப்பேறு தருவதாக வாக்களித்து மறைந்தார்.

அதன்படி இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கனின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர், ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.இந்த புராணப் பின்னணியை மனதில் கொண்டு கி.பி.1136ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால் இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அன்று முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப்பெருமாள்.

குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் வகையில் 108 படிகள் கடந்து மேலே செல்ல, முதலில் மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது.

முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே.. மகா மண்டபத்தில் நேராக தென் திசையை பார்த்தபடி ஸ்ரீ வீரஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார். சற்று இடதுபுறம் திரும்பிட, ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் கடாட்சியாக, திருவருள் பொழிகின்றாள். அருகில் ஸ்ரீ நரசிம்மரது தரிசனம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், எழில் சுரக்கும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு வணங்கலாம்.

15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்க, தலைமாட்டில் ஸ்ரீ தேவியும், கால் மாட்டில் பூதேவியும் அமர்ந்து, அரங்கனுக்கு சேவை புரிந்திட, திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகப்பிரம்ம ரிஷியும் தவம் கிடக்க, பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, யான்
மூவுலகங்களையும் அளந்தவன் என சுட்டிக் காட்டுகிறார்.

இவருக்கு முன்னே… உற்சவமூர்த்தியான ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ தேவி-பூதேவியுடன் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கிறார். அரங்கனை தரிசித்த பிறகு ஆலய வலம் வருகையில்
ஆண்டாளை வணங்கலாம். சந்நதிக்கு வெளியே தனியாக சந்நதி கொண்டு, அரங்கனை பார்த்து கூப்பிய கரங்களோடு நின்றபடி இருக்கிறார் கருடாழ்வார். வடக்குப் புறமாக சிறுவாயில் வழியாக படிகளில் இறங்கினால் சுனை வடிவில் தல தீர்த்தமான நாரத தீர்த்தம் உள்ளது. சொர்க்கவாசலும் சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் உள்ளன. இக்கோயில் கி.பி.1140ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைஷ்ணவ சம்பிரதாயங்களும் இங்கு விசேஷமாக அனுசரிக்கப்படுகின்றன. திருமண பாக்கியம் மற்றும் குழந்தைப் பேறு வேண்டுவோர் அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வித்து, நற்பலன் அடையலாம். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள திருமால்பாடி திருத்தலம், செஞ்சி சேத்பட் பேருந்து சாலையில் இருந்து தேசூர் செல்லும் வழியில் அருந்தோடு கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது.

மகி

You may also like

Leave a Comment

six − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi