*வீட்டில் 2 நாள் மறைத்து வைத்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசியது
அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் அமிர்தம்மாள்(80). இவரது, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவின் பூட்டு உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, போர்வையால் போர்த்தியபடி அமிர்தம்மாள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். மேலும் அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தது. அவருக்கு அருகில் சிதைந்த நிலையில் அன்னக்கூடை இருந்தது. இதனால் அவர் அன்னக்கூடையால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அமிர்தம்மாளின் மகன் ராஜா(48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் தாயை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
கைதானவரிடம் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:கொலையான அமிர்தம்மாளின் கணவர் ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சேகர், ராஜா என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் ராஜாவுடன் அமிர்தம்மாள் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலை செய்யும் ராஜா சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்துள்ளார். இதனால் ராஜாவின் மனைவி கோபித்துக்கொண்டு தனது மகன், மகளுடன் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து ராஜா, தாய் அமிர்தம்மாளிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி ராஜா வழக்கம்போல் பணம் கேட்டு அவரது தாய் அமிர்தம்மாளை தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால் அமிர்தம்மாள் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜா அன்னக்கூடையை எடுத்து தாயின் முகம், தலைப்பகுதியில் சரமாரி தாக்கி உள்ளார். இதில் அமிர்தம்மாள் பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்த போர்வையை எடுத்து தாயின் உடல் மீது போர்த்திவிட்டு கதவை பூட்டிக்கொண்டு ராஜா வெளியே சென்றுவிட்டார்.
கொலை நடந்து 2 நாட்கள் ஆன நிலையில், சடலம் லேசாக அழுகி துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி அங்கு சென்று சோதனை செய்யப்பட்டது. மேலும் கொலையாளி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.