அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள். ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும் கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிற பூக்கள் மூன்றும், சிவப்பு நிற பூக்கள் மூன்றும் பயன் படுத்துவர். சிவப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிற பூக்கள் வந்தால் வீடு மனை நிலம் வாங்கலாம் என்பதாக அம்மன் உத்தரவிடுகிறாள். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாக தருகிறாள். ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 24வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.
நத்தம் மாரியம்மன்
மதுரை சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரசபீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன் ஆவாள். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன் பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி கிடந்தது. அரசனுக்கு இந்த விஷயம் சென்றது. சோதித்துப் பார்க்கும்போது அப்படியே நடந்தது. மன்னன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். ரத்தம் பீறிட்டது. அம்மனின் சிலை தெரிந்தது. அங்கேயே அரசன் அம்மனுக்கு கோயிலைக் கட்டினான். இத்தலம் திண்டுக்கல்லுக்கு அருகேேய உள்ளது. நோய் தீர்க்கும் தேவியாக நத்தம் அம்மன் விளங்குகிறாள்.
கோவை ஸ்ரீதண்டு மாரியம்மன்
ஒரு சமயம் திப்பு சுல்தானின் படைவீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தாங்கியிருந்தனர். வீரர்களில் ஒருவனின் கனவில், ஒரு வனப் பகுதியில் அன்னை காட்சியளித்தாள். பொழுது விடிந்ததும் அந்த அம்மனைத் தேடி அலைந்தான். ஒரு வேப்ப மரத்தடியில் அன்னையைக் கண்டு உவகை கொண்டான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான்.
கூடாரத்தில் கண்ட கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால், படைவீரர்கள் தங்கும் கூடாரம். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும் அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டிருக்கிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்
கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஆலயம் இது. மூலவர், மகாலட்சுமீ ஸ்வரர். தேவாதி தேவர்கள் தினம் வந்து தொழுகிறார்கள் என்பது ஐதீகம். அம்பிகையின் பெயர் லோகாம்பிகை எனும் உலகநாயகி. திருமாலின் திருமார்பிலிருந்து நீங்காதிருக்கும் வரத்தை மகாலட்சுமி இத்தலத்து ஈசனை பூஜித்துப் பெற்றாள். எனவே லட்சுமி கடாட்சம் பெற இத்தலத்தை நோக்கி, பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆடி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
லட்சுமியின் பூரண அருள்பெற தாமரை இதழில் தேனூற்றி, ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது. ஏனெனில், அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பாதையில் 7வது கிலோ மீட்டரில் இத்தலம் உள்ளது.
கரை காத்த காளி அம்மன்
கடலூர் புது பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் அமைந்துள்ளது கரைகாத்த காளியம்மன் கோயில். ஒருமுறை இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, வெள்ளத்தைத் தடுத்து மக்களைக் காத்த தெய்வம் என்று இந்த அம்மனைப் போற்றுவர். எனவே, ‘கரை காத்த காளி அம்மன்’ என்றும் இந்த அம்மனை அழைக்கின்றனர். நியாயமான வழக்குகளில் வெற்றி கிடைக்க, இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து புடவை சார்த்தி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
ஜெயசெல்வி