சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பாமக பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாமக தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்துக்கு நானே தலைமையேற்கிறேன்.கடலூர் மாவட்ட உழவர்களையும், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.