சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் இந்நிலையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்க அரபிக் கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் 21ம் தேதி மேலும் வலுப்பெற்று மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதேபோல, வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இது நாளை(20ம்தேதி) மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து குமரிக் கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த நிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளின் மூலம் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.