புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார். குறிப்பாக சில மசோதாக்களை அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதனால் மக்கள் நலம் சார்ந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுமார் 13 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் உள்ளது. அதில் முக்கியமாக பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பலமுறை அழுத்தம் கொடுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை வேண்டுமென்றே தற்போது வரை கிடப்பிலேயே போட்டு வைத்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார். இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும். இதைத்தவிர தமிழ்நாடு அரசு பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும் அவரது செயல்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசால் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அது அனுப்பி வைக்கும்போது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்வது போன்று அரசாணைகளையும் கிடப்பில் போடுகிறார். தமிழ்நாடு அரசின் மிகவும் அத்தியாவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைப்பது என்பது அரசியல் சாசனங்களுக்கு எதிரானதாகும்.
அதுமட்டும் இல்லாமல் ஆளுநர் என்ற அதிகாரத்தையும், அந்த பொறுப்பையும் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார். இதில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஆளுநர் என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு ஆர்.என்.ரவி அதனை பறித்து வருகிறார். ஆளுநரின் இந்த செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உன்மையாகும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயலற்ற நபராக விளங்கி வருகிறார். மேலும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச் செல்வதிலும் ஆளுநர் இடையூறாக இருந்து வருவது மட்டுமில்லாமல், சிபிஐ விசாரணை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன பரிந்துரையையும் முறையான விளக்கமின்றி நிராகரித்துள்ளார்.
குறிப்பாக பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்தது என்பதை மறுக்க முடியாது. இதில் முன்னதாக ஆளுநர் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகள் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் இருக்கக்கூடிய உரிமைகள் போன்றவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான கேசவனந்த பாரதி வழக்கு தீர்ப்பு உட்பட ஆகியவை இந்த விவகாரத்தில் முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. அதனால் சர்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பரிசீலிப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் உடனடியாக வகுக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரையுடன் கூடிய ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.
* நிலுவையில் உள்ள மசோதாக்கள்
20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது. அதன் விவரம்: 2020 ஜனவரியில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்ட திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. 2022 ஜனவரி 12ம் தேதி அனுப்பப்பட்ட, கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா, ஏப். 28-ல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைகள் மற்றும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் மசோதா, மே 5ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மே 12-ல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன. மே 16ம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.