புதுடெல்லி: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் நேற்று நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு 51ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘ ஆயுத படைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். உடல் தகுதி முக்கியமானது. உடல் தகுதியோடு இருந்தால் பாதி வேலைகள் விரைவில் முடிந்து விடும். நாள்தோறும் யோகா பயிற்சியை செய்ய வேண்டும். பதற்றமான தருணங்களை சமாளிப்பதற்கு யோகா உதவும்.
ஆட்டோமொபைல், சுற்றுலா மற்றும் உணவு சார்ந்த துறைகள் மிக வேகமாக வளரும் என்றும் இவற்றின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவெடுத்துவருகின்றது. விரைவில் உலகின் 3 முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பிடித்து சாமானியர்களுக்கு பலன்களை கொண்டு வரும். பொருளாதாரம் வளர, ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைய வேண்டும். உணவு முதல் மருந்து வரை, விண்வெளி முதல் ஸ்டார்ட் அப் வரை ஒவ்வொரு துறையும் வளரும்போது நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும். 2030ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்துக்கு சுற்றுலா துறை மட்டும் ரூ.20லட்சம் கோடியை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 13-14கோடி புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.” என்றார்.