புதுடெல்லி: நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிபதிகளை நியமனம் செய்வது, சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்வது, நீதி துறையில் பணியாற்றுபவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு விசாரித்து வந்தது.
இந்த விவகாரத்தில் பதிலளிக்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், தமிழ்நாடு உட்பட மொத்த 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் நிதி செயலாளர்கள் வரும் 27ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 22ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் நிதி செயலாளர் உதயச்சந்திரன் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது அவர்கள தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ‘இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அதற்கான தொகையை அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதனை நடைமுறைப்படுத்த உள்ளோம். இதுதொடர்பாக விரிவான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. ஏனெனில், ஏற்கனவே இந்த விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே அந்த மாநிலத்தின் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. மேலும் நீதிபதிகள், சட்டத்துறை அதிகாரிகள் தங்களுக்கான பண பலன்களை பெறுவதற்கான பில்களை தயார் செய்து உடனடியாக அரசிடம் வழங்கலாம்.
அடுத்த நான்கு வாரத்தில் உரிய முறையில் பணப் பலன்களை வழங்குவதற்கான பணிகளை அரசு தரப்பில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலும் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் இனிமேல் ஆஜராக வேண்டாம். அதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீதான நடவடிக்கையும் முடித்து வைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.