சென்னை: பணி நியமன விதிகளின்படி நியமனம் பெறாதவர்கள் பதவி உயர்வு கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் எங்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டு பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு பணிகளை செய்து பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சங்கத்தில் நவம்பரில் இருந்து ஏப்ரல் வரை அதிக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். இதையடுத்து, தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் கடந்த 1990 ஜனவரி 10ம் தேதி நிரந்தரம் செய்யப்பட்டு ஜூனியர் பேக்டரி உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றார்கள்.
பின்னர் இவர்களில் பலர் பல்வேறு பணிகளை குறிப்பிட்டு பதவி உயர்வு கோரினர். ஆனால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.கே.இளந்திரையன், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர்களுக்கு தகுதி அடிப்படையில் இளநிலை செயல் அதிகாரி, டெக்னிக்கல் ஆபரேட்டர், சிறப்பு நிலை மூத்த மஸ்தூர் உள்ளிட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பணி நியமன விதிகளின்படி நியமனம் பெறாதவர்கள் லேப் டெக்னீசியன் பதவியை கோர முடியாது. எனவே, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.