சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் பணியிடங்களும், துறையின் அமைச்சுப்பணியில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 169 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 80 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 101 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கும், என மொத்தம் 381 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கருணை அடிப்படையில் துறையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 29 நபர்களுக்கும், திருக்கோயில்கள் சார்பில் 111 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்து சமய அறநிலையத்துறையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 713 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு, திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
முதலமைச்சர் அவர்களால் இன்று 172 உதவியாளர் பணியிடத்திற்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.