புதுடெல்லி: மாவட்ட நீதிபதிகள் நியமனத்தை வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் நியமனங்கள் நிலுவையில் இருப்பதற்கு எதிராக உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாலிக் மசர் சுல்தான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் 86 மாவட்ட நீதிபதிகள், 327 மாவட்ட சிவில் நீதிபதிகள், 77 மூத்த சிவில் நீதிபதிகள், 176 ஜூனியர் மாவட்ட சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள 1,369 மாவட்ட நீதிபதிகள் நியமனத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
குறிப்பாக டிசம்பர் மாதம் இறுதிக்குள் மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும், அதேபோன்று ‘‘வைவா” தேர்வுகளை ஜனவரியில் முடித்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் அமித் ஆனந்த் திவாரி, 3 மாதம் அவகாசம் கேட்டார். ஆனால் அதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி, ‘‘மாவட்ட நியமனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.