சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் டிஜிபி சுனில்குமார், தற்போது ரெரா (தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்) பொறுப்பு தலைவராக உள்ளார். இந்தநிலையில், சுனில்குமாரை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பதவியில் இதுவரை ஐஜிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை பதவியில் உள்ளவர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக ஓய்வு பெற்ற டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சுனில்குமார் 1987ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, சுங்கத்துறையில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி 1988ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். பின்னர் பயிற்சி முடித்து கடலூர், திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பயிற்சி கூடுதல் எஸ்பியாக பணியாற்றினார். பின்னர் ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்றவர், உதவி இயக்குநர், கூடுதல் துணை இயக்குநராக மத்திய உளவுத்துறையில் பணியாற்றினார்.
தமிழக பணிக்குத் திரும்பிய சுனில்குமார், சேலம் மற்றும் கோவை மாநகர ஆணையராக பணியாற்றினார். மத்திய சென்னை இணை கமிஷனராக பணியாற்றினார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பொய்யான புகார் கொடுக்கும்படி அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தலைமை சுனில்குமாரை மிரட்டியது. நேர்மையான அதிகாரியான சுனில்குமார், புகார் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பல நாட்கள் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த அதிமுக, பின்னர் மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், லஞ்ச ஒழிப்புத் துணை கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றினார்.
பின்னர் ரயில்வே, போலீஸ் நவீனமயமாக்கல், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகிய பதவிகளில் பணியாற்றினார். கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று குற்றப்பிரிவு, ஆவின் விஜிலன்ஸ், சத்தியமங்கலம் ஆயுதப்படைகளில் பணியாற்றியவர், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இந்தப் பதவியில் இருந்தபோது காவலர்கள் தேர்வை நேர்மையாகவும், நியாயமாகவும், கம்ப்யூட்டர்மயமாகவும் நடத்தினார். பின்னர் மனித உரிமை மற்றும் சிவில் சப்ளை டிஐஜிபியாக பணியாற்று ஓய்வு பெற்றார். தற்போது மீண்டும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.