ஆவடி: ஊர்காவல் படையில் சேர விருப்பம் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம் என காவல் ஆணையர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆவடி காவல் ஊர்காவல் படையில் 50 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் கடலோரக் காவல் படையில் பணிபுரிய நன்றாக நீச்சல் தெரிந்த 2 ஆண்கள் ஊர்க்காவல் படைக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊர்காவல் படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள். குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு, பயிற்சி முடித்த பிறகு அவர்கள் வசிக்கும் காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிய சீருடை, தொப்பி மற்றும் காலணிகள் வழங்கப்படும்.
பெண்களுக்கு பகல் ரோந்து பணிகள், போக்குவரத்து பணிகள் மற்றும் ஆண்களுக்கு இரவு ரோந்து பணிகள் மற்றும் போக்குவரத்து பணிகளும் செய்யலாம். அதற்கான ஊதியம் ரூ.560 வீதம் மாதத்தில் 5 நாட்களுக்கு ரூ.2,800 மட்டும் மாத ஊதியமாக வழங்கப்படும். சிறப்பாக பணிபுரியும் நபர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதிகள் அடிப்படையில் வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதி உள்ளவர்கள், விண்ணப்பங்களை ஆவடி ஆயுதப்படையில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 6ம் தேதி முதல் முதல் 14ம் தேதி வரை விண்ணப்பங்களை காவல் உதவி ஆணையாளர் அலுவலகம், ஆவடி ஆயுதப்படை, ஊர்காவல்படை, ஆவடி காவல் ஆணையரகம் என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.