சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6ம் தேதி துவங்கியது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என நேற்று வரை சுமார் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரிபார்க்கப்படும். இந்நிலையில், விண்ணப்ப பதிவு செய்வதற்கான கடைசி நாளை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 6ம் தேதி துவங்கியது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகிற 25ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் ஏற்கனவே தங்களிடம் உள்ள மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பிக்கலாம்.
ஏனெனில், பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம், மருத்துவ ஆலோசனைக் குழு (MCC, DGHS) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய பின்பு சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்துவ மையங்கள் மூலம் இதற்கான சான்றிதழ்களை வழங்கும். எனவே, அந்தந்த மண்டல மருத்துவ மையங்களிலிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்களை பதிவேற்றுவது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.