சென்னை: கலை மற்றும் அறிவியல் படிப்பு விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த வருடம் கூடுதலாக 11 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, 176 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் மாநில கல்லூரி (2,380 இடங்கள்), ராணி மேரி கல்லூரி (2,038), பாரதி மகளிர் கல்லூரி (1,410), டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (1,086), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (1,468), நந்தனம் அரசு கலைக் கல்லூரி (1,430), ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரி (590), ஆலந்தூர் அரசு கலைக் கல்லூரி (280) என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்ப பதிவில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மையங்கள் (ஹெல்ப் டெஸ்க்)மற்றும் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரகணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பபதிவும், அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.