சென்னை: நடப்பாண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இந்த ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மட்டும் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் இந்திய ஒதுக்கீட்டுக்காக 888 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம், சுயநிதிக் கல்லூரி என அரசு, தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. பிடிஎஸ் இடங்களைப் பொறுத்தவரை தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் தகவல்படி, இதுவரை 69,500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவுக்கு நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை நீட்டித்து வருகிற 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 4 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.