புற்றுநோய்களில் பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று அப்பெண்டிக்ஸ் புற்றுநோய். இது குடல்வாலில் பரவக்கூடிய மிகவும் அரிதான புற்றுநோயாகும். குடல்வால் என்பது வயிற்று பகுதியில் இருக்கும் பை போன்ற ஓர் உறுப்பாகும். இவ்வுறுப்பு செரிமான மண்டல உறுப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இது பொதுவாக 10 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட எந்த வேலையும் செய்யாத பயனற்ற உறுப்பாகவே இது கருதப்படுகிறது. இந்த குடல்வாலில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்று பல்கிப்பெருகுவதனால் இதில் புற்றுநோய் உண்டாகிறது. பத்து லட்சம் பேரில் 6 பேருக்குத்தான் இந்த புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்கிறார் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர். பி.வெங்கட். அவர் அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் குறித்து மேலும் கூறியதாவது:
“பொதுவாக ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட, புகைப்பிடித்தல், மதுபழக்கம், உணவு பழக்கவழக்கம், ரசாயனங்கள் போன்றவை காரணங்களாக இருக்கும். ஆனால், மிகவும் அரிதான புற்றுநோயாக கருதப்படும் இந்த அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாக இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை.
பெருங்குடலில் வலது பக்கம் உள்ள சிறிய குடல்வால் போன்ற உறுப்புதான் அப்பெண்டிக்ஸ் ஆகும். இந்த உறுப்பினால் உடலில் பெரியளவில் எந்தவித பயனும் இல்லை. ஆனால், இந்த அப்பெண்டிக்ஸில் பல பிரச்னைகள் வரலாம். அதில் பொதுவாக பார்க்கப்படுவது அப்பெண்டிசைட்டிஸ் ஆகும். அதாவது, அப்பெண்டிக்ஸில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் இந்த அப்பெண்டிசைட்டிஸ் ஏற்படும். இதற்கு தீர்வு என்றால், அது அறுவை சிகிச்சை மட்டுமே. பொதுவாக, அப்பெண்டிக்ஸில் எந்த பிரச்னை வந்தாலும், அதற்கு அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்டிக்ஸை நீக்குவதுதான் தீர்வாக இருந்துவருகிறது.
அப்பெண்டிசைட்டிஸ் பிரச்னையை பொருத்தவரை இளம் வயதினரையே அதிகம் பாதிக்கிறது. ஏனென்றால், அந்த வயதில் அப்பெண்டிக்ஸின் வாய்ப்பகுதி மிகச் சிறியதாக இருக்கும். அதில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது தொற்றாக மாறிவிடும். எனவே, இளம் வயதில் அப்பெண்டிஸ்சைட்டிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வளர்ந்தவர்களுக்கு அப்பெண்டிக்ஸின் வாய்ப்பகுதி அகலமாகிவிடுவதால், அப்பெண்டிசைட்டிஸ் வர வாய்ப்பு இல்லை. ஆனால், அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது.
பொதுவாக மற்ற புற்றுநோய்கள் ஏற்படும்போது, ஒரு சில நாள்களில் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். ஆனால், இந்த அப்பெண்டிக்ஸ் புற்றை பொருத்தவரை, 95 சதவீதம் வளரும் வரை எந்தவித அறிகுறியும் தெரியாது. இது வளர்ந்து முற்றியநிலையில்தான் வயிற்றுவலி போன்று தோன்றும். அதற்கான ஆய்வுகள் செய்யும்போதுதான், அப்பெண்டிக்ஸ் புற்று இருப்பது தெரியவரும்.
இதில் சில அப்பெண்டிக்ஸ் புற்றில் மியுசின் என்ற ஜெல்லி போன்ற ஒரு திரவம் சுரக்கும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சிலருக்கு வெடித்துவிடும் வாய்ப்பு உண்டு. அப்படி வெடிக்கும்போது அதனுள் இருக்கும் இந்த மியுசின் திரவம் வயிறு முழுக்க பரவிவிடும். இந்த நிலையை சூடோமிக்ஸோமா பெரிடோனை (pseudomyxoma peritonei) என்கிறோம். இது வெடித்தபிறகும் உடனடியாக எந்த பாதிப்போ, வலியோ, அறிகுறியோ தெரியாது. சில நாள் கழித்துதான் அஜீரண கோளாறு தோன்றும், வயிறு உப்புசமாக மந்தமாக இருப்பது போல் தோன்றும். வயிறு உப்புசம் தொடர்ந்து இருக்கும்போது, ஆய்வு செய்து பார்த்தால், சிலருக்கு அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் இருப்பது தெரிய வரும்.
அதுபோல், வயிற்றில் வேறு ஏதாவது பிரச்னை இருந்து அதை ஆய்வு செய்யும் தும் சிலருக்கு அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சிலருக்கு வேறு ஏதேனும் பிரச்னைக்காக வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படலாம். இதுதவிர, அப்பெண்டிக்ஸில் கட்டிபோன்று தோன்றி கண்டுப்பிடிப்பது மிகவும் அரிதானதாகும்.
இதற்கான சிகிச்சைமுறைகள் என்றால் அப்பெண்டிக்ஸ் புற்று இருப்பது உறுதியானால், பெரும்பாலும், அப்பெண்டிக்ஸ் உறுப்பை முழுமையாக நீக்குவதுதான். இதை நீக்குவதுதனால் உடலில் பெரிய பாதிப்பும் ஏற்படாது. ஏன்னென்றால், இந்த உறுப்புக்கு பெரிய வேலைகள் எதுவும் இல்லாததால், இதனை நீக்குவதனால் பாதிப்புகள் இருக்காது.
சிலருக்கு வேறு ஏதேனும் பிரச்னைக்காக, பயாப்ஸி செய்யும்போது, அதில் அப்பெண்டிக்ஸ் புற்றுநோய் இருப்பது தெரியவரும். அப்படி தெரியவரும்போது, அது என்ன வகையான புற்றுநோய் என்பதை கண்டறிய வேண்டும். அடுத்ததாக, அது எந்த இடத்தில் வந்திருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இதில், விளிம்பு பகுதியில் இருக்கிறதா அல்லது அடிப்பகுதியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விளிம்பு பகுதியில் இருந்தால், பொதுவான சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முயலுவோம். அதுவே, அடிப்பகுதியில் இருந்தால், அந்த உறுப்பையே
நீக்குவது ஒன்றுதான் தீர்வாகும்.
சிலசமயம், இந்த மியுசின் எனும் ஜெல்லி வெடித்து வயிறு முழுக்க பரவும்போது, எம்.ஆர்.ஐ டெஸ்ட் எடுத்து எவ்வளவுதூரம் பரவி இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய மீண்டும் ஒரு மேஜர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இதற்கு, சைட்டோரிடக்டிக் அறுவை சிகிச்சை என்று சொல்லுவோம். இதில், ஜெல்லி எங்கெல்லாம் வெடித்து சிதறி இருக்கிறதோ, அதனை முழுவதுமாக நீக்க வேண்டி இருக்கும்.
அதுபோன்று அடிவயிற்றில் பெரிடோனியம் என்ற குழாய் ஒன்று இருக்கும். அந்த குழாயில் இந்த ஜெல்லி ஒட்டியிருக்கும். அதனை எல்லாம் நீக்க வேண்டியது அவசியமாகும். ஜெல்லியை நீக்கிய பின்னர், வயிற்றுக்குள் ஹைடெக் கீமோ தெரபி, கொடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த அறுவை சிகிச்சை செய்ய சுமார் 12-13 நேரம் கூட ஆகலாம். இதுதவிர, அடுத்தகட்டமாக, சிலருக்கு இன்ஜெக்ஷன் கீமோ தெரபி கொடுக்க வேண்டியது இருக்கும்.
அதுபோன்று, அப்பெண்டிக்ஸ் வெடித்து ஜெல்லி சிதறும்போது, அதற்கான சிகிச்சை மேற்கொள்வதற்கென்றே தனிச் சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டும்தான் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான உபகரணங்களும் ஹைடெக்காகவே இருக்க வேண்டும். எனவே, அதற்கான வசதிகள் நிறைந்த மருத்துவமனைகளில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
அதுபோன்று இந்த அப்பெண்டிக்ஸ் புற்று நோயை பொறுத்தவரை, ஜெல்லி வெடித்து 95 சதவீதம் பரவிய நிலையில் இருந்தால் கூட அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். பெரியளவில் உயிருக்கு ஆபத்து இருக்காது. இந்த அப்பெண்டிக்ஸ் புற்றுநோயை பொறுத்தவரை, தற்காத்து கொள்ளும் வழிகள் என்று எதுவும் இல்லை. ஏனென்றால், நான் முன்பே சொன்னது போன்று, இது புகைப்பிடித்தல், மதுபழக்கம், உணவு பழக்கவழக்கம், ரசாயனங்கள் போன்ற எந்தவித குறிப்பிட்ட காரணமும் இல்லாததால், இதிலிருந்து தற்காத்துக்கொள்வது கடினம். முடிந்த வரை, தொடர்ந்து ஆஜிரணக் கோளாறோ அல்லது வயிறு உப்புசமோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்” என்றார்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்