*திருவாரூர் அருகே சினிமாவை மிஞ்சும் சம்பவம்
திருவாரூர் : கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பி சென்றபோது, ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (எ) ஓணான் செந்தில் (43). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, சிலை கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கூழு (எ) சின்னப்பா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்காக திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக கும்பகோணம் திப்பிராஜபுரத்திலிருந்து கார் மூலம் செந்தில் நேற்று திருவாரூர் சென்றார்.
பின்னர் விசாரணை முடிந்து மீண்டும் கார் மூலம் ஊர் திரும்பினார். காரை செந்தில் என்பவர் ஓட்டினார். காரில் வழக்கறிஞர்கள் கும்பகோணத்தை சேர்ந்த அகிலன் (37), மயிலாடுதுறையை சேர்ந்த பாரதிராஜா (31) ஆகியோரும் இருந்தனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி குடவாசல் இடையே நாகலூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த ஒரு கார், செந்தில் சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து நின்றது. இதை எதிர்பார்க்காத செந்தில், காரிலிருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் காரிலிருந்து இறங்கிய 5பேர் கொண்ட மர்ம கும்பல், செந்திலை துரத்தி சென்று அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் துடிதுடித்து இறந்தார். இதில் அவரது தலையை கொலைக்கும்பல் துண்டித்தது.
இச்சம்பவத்தை தடுக்க முயன்ற வழக்கறிஞர் அகிலனையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் தலை, வலது கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல், கார் மூலம் அங்கிருந்து தப்பி சென்றது. தகவலறிந்த திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்ப இடத்திற்கு சென்றனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த வக்கீல் அகிலன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொலையான செந்திலின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிந்து பழிக்கு பழியாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.