சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன.
ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக, தமிழகம் முழுவதும் பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கினார் ஸ்டாலின். இன்றுவரை அந்த பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன, அந்த கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா என்று எழுப்பிய கேள்விகளுக்கு புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்குக்கூட – ‘முதல்வரின் முகவரித்துறை’, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘மக்களுடன் முதல்வர்’, ‘நீங்கள் நலமா?’, ‘மக்களுடன் முதல்வர் – நகரம் மற்றும் ஊரகம்’ ‘மக்களுடன் முதல்வர் – பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்’ என்று பல்வேறு பெயர்களை சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. ஆனால், மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு ஆட்சியின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.