சென்னை : தமிழர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக பா.ஜ., ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளார். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது (ஆக.16) ஒன்றைக்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்புக் கோரி அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இதுவரை ஷோபா மன்னிப்பு கேட்காத நிலையில் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தரப்பில்; தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளது.
சர்ச்சை பேச்சு தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. முதல்வரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், “ஒரே நேரத்தில் சூடாகவும் குளிராகவும் இருக்க முடியாது. ஷோபா மன்னிப்பு கேட்பாரா அல்லது நீதிமன்றத்தில் அரசின் முன்மொழிவை எதிர்த்துப் போராட விரும்புகிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கூறினார். இதனையடுத்து ஒரு வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.