சென்னை: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அறுவைசிகிச்சை அல்லாத போன்டன் மருத்துவ நடைமுறை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. அப்போது இதய அறுவை சிகிச்சை நிபுணர் நெவில்லே ஏஜி சாலமன் நிருபர்களிடம் கூறியதாவது: அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளும் போன்டன் மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாக செய்திருப்பதன் மூலம் குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இந்த மருத்துவ நடைமுறை, குழந்தைகளுக்கு இருக்கும் சிக்கலான இதய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இதய பராமரிப்பு தொடர்பான முழுமையான அணுகுமுறையில், அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை நிபுணத்துவத்தை இணைத்து சிக்கலான இதய நிலைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை அல்லாத போன்டன் மருத்துவ நடைமுறை புதுமையான, நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் புதுமையான சிகிச்சையை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 12 அறுவை சிகிச்சை அல்லாத போன்டன் மருத்துவ நடைமுறைகளை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை 100 சதவீதம் வெற்றிகரமாக முடித்துள்ளோம், மேலும் சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பு 2 ஆண்டுகள் தொடரும், எனவே தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறோம். இந்த நவீன போன்டன் மருத்துவ நடைமுறை உயிர் காக்கும் வாய்ப்பினை அதிகமாக வழங்குகிறது. மேலும் நோயாளிகள் இப்போது 2-3 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள், இதனால் குணமடையும் காலம் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.