சென்னை: புற்றுநோயியல் மருத்துவர்களுக்கு புரோட்டான் பீம் தெரபி சிகிச்சை பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், 2019ல் இருந்து இயங்கி வருகிறது. இந்த சென்டர் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முதல் புரோட்டான் தெரப்பி சென்டராகும். இங்கு கடந்த 4 ஆண்டுகளில் 1000க்கும் அதிகமான புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தற்போது, புரோட்டான் பீம் தெரபி சிகிச்சை புற்றுநோயின் துல்லியமான கதிரியக்க சிகிச்சையாக உருவெடுத்துள்ளது. அதனால், மருத்துவர்களுக்கு புரோட்டான் பீம் தெரபி சிகிச்சை பயிற்சி வழங்குவதற்காக அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் மற்றும் ஐயன் பீம் அப்ளிகேசன் (ஐபிஏ) நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று தரமணியில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்தது. இதில், அப்போலோ மருத்துவமனை என்டர்பிரைசஸ் லிமிடெட் செயலாக்க துணை தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மற்றும் ஐபிஏ நிறுவனம் விற்பனைத் துறை இயக்குனர் கிளாட் டூபான்ட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனை என்டர்பிரைசஸ் லிமிடெட் குரூப் ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் துறையின் தலைவர் தினேஷ் மாதவன், அப்போலோ மருத்துவமனை என்டர்பிரைசஸ் லிமிடெட் குழு புற்றுநோயில் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் தலைவர் ஹர்ஷத் ரெட்டி, மருத்துவமனை இயக்குனர் மற்றும் மூளை நரம்பியல், புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் ராகேஷ் ஜலாலி மற்றும் மருத்துவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.