சென்னை: அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் 5வது கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் நேற்று தொடங்கியது. இதை அப்போலோ மருத்துவமனை செயலாக்க துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: 5வது அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நாளை (இன்று) முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது.
மூன்று நாள் நிகழ்வாக நடைபெறும் கருத்தரங்கு, அறிவைப் பகிர்ந்து கொள்வதையும், பெருங்குடல் அறுவை சிகிச்சையின் சமீபத்திய முன்னேற்றங்களில் ஒத்துழைப்போடு செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு, உலகின் தலைசிறந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெருங்குடல் அறுவைசிகிச்சை மருத்துவர்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும். இந்த கருத்தரங்கம், சிறந்த சிந்தனையாளர்களை ஒன்று கூட்டுவதோடு நின்றுவிடுவதில்லை.
குறிப்பாக இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இது ஒரு நிலை மாற்றத்தை உருவாக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகும். ரோபோ அறுவை சிகிச்சைகளை தரநிலைப்படுத்தியுள்ளோம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான உலகின் மிகவும் செலவு குறைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சராசரியாக, மேற்கத்திய நாடுகளில் இதேபோன்ற மருத்துவ செயல்முறைக்கு ஆகும் செலவில் 4ல் 1 பங்கு செலவில் அதே உயர்தர சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம். அப்போலோ புரோட்டானின் ஏஆர்சி (ARC) திட்டம், பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் நடப்பு நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதையும் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்றார்.