கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே முருகமங்கலம் கிராமத்தில் 1,260 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறத்து வைத்தார். இதில் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் முருகமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், முருகமங்கலம் கிராமத்தில் ரூ.151.94 கோடி மதிப்பீட்டில் 1,260 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதேபோல் விநாயகபுரம் பகுதியில் 1,760 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் முருகமங்கலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,260 வீடுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக முருகமங்கலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் ஆர்.ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஏவிஎம் இளங்கோவன், சித்ராரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வசுந்தரி ராஜேந்திரன், வனிதா ஸ்ரீசீனிவாசன், நளினி ஜெகன், முத்தமிழ்செல்வி விஜயராஜ், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.