Tuesday, November 28, 2023
Home » மதவாதம் தவிர பாஜவிடம் வேறு கொள்கை இல்லை வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

மதவாதம் தவிர பாஜவிடம் வேறு கொள்கை இல்லை வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

by Dhanush Kumar

சென்னை: மதவாதம் என்பதை தவிர பாஜவிடம் வேறு கொள்கை எதுவும் இல்லை. ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தித் தளத்துக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதல்வராக மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். காலை உணவு திட்டமாக இருக்கட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகட்டும் பெரும் பொருட்செலவு வைக்கக்கூடிய இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு இருக்கும் சவாலாக எதைக் கருதுகிறீர்கள்? திராவிட மாடல் அரசின் சிறப்பான திட்டங்களாக நீங்கள் குறிப்பிடும் இந்தத் திட்டங்களின் வரிசையில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டமும் முக்கியமானது. இவை அனைத்துமே அன்றாட தேவைக்கான திட்டமாக மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ள காரணத்தால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் எத்தகைய சவால்கள் இருந்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட கடன் சுமை-நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை சமாளித்து, தற்போதைய ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறை போன்ற சவால்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது. தமிழ்நாட்டை இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆகவே இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மக்கள்நலத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். வடக்கில் வலதுசாரிகளின் பெரும்பலமாக இருக்கும் இந்துத்வா அடிப்படையிலான ஒருங்கிணைப்பை உடைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறீர்களா? இதனை உடைத்து வாக்குகளைப் பெற இந்தியா கூட்டணியின் உத்தி என்ன?

மதவாதம் என்பதைத் தவிர பாஜவிடம் வேறு கொள்கை எதுவும் இல்லை! ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மதித்தல், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் மீது கவனம் குவித்தல் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து நிற்கிறோம். ஆகவே, பாஜவின் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில் உள்ள வெற்றி வாய்ப்புகளுக்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்தி. அதில் வெற்றி பெற முடியும் என்பதை சமீபத்திய இடைத் தேர்தல்கள், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் போன்றவை காட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

* திமுக இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெ ளியாகின்றன. பிரதமராகும் லட்சியம் திமுக தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? தேசிய அரசியலில் திமுக ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது. வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காக பிரதமர் இந்திரா காந்தியின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் திமுகவின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் கலைஞர். நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக உரிமைக்குரலை முன்னெடுத்து, வடஇந்திய அரசியல் தலைவர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் முதுகெலும்பாக இருந்தது திமுக. அதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு வழங்க வித்திட்டு, அணையா விளக்கான “சமூகநீதி”யை இந்தியா முழுமைக்கும் ஏற்றி வைத்தது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற பாராட்டைப் பெறும் விதத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, இந்தியாவில் கூட்டணி அரசு தன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு உறுதுணையாக நின்று, ஒன்றியத்தில் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது கலைஞரின் திமுக தான். 2 முறை மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் தி.மு.க. முதன்மையாக இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் திமுகவின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன. கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் திமுக தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்.

ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வரும் மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டங்களும் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி ஆதிக்க எதிர்ப்புக்காக அறியப்பட்ட திமுகவும் தமிழ்நாடும் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகின்றன? இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை இரண்டிலுமே திமுகவின் எம்பிக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்தியிலான அறிவிப்புகள், அழைப்பிதழ்களைக் கிழித்தெறிந்து எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். பாஜ அரசின் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மறைமுகத் திட்டம், தமிழை மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் அவரவர் தாய்மொழிகளுக்கும் எந்தளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல. எங்கள் மொழி மீது எந்தவொரு மொழியைத் திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பவர்கள். அந்த நிலை தொடரும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமையவிருக்கிற புதிய ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் உரிய உரிமையும் முக்கியத்துவமும் சமமாக வழங்கப்படும்.

வா ட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களை பாஜ தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தும் விதம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது காலத்திற்கேற்ப டிஜிட்டல் ஊடகங்களைக் கையாளும் வியூகமா அல்லது அதிகார அத்துமீறலா? இது பற்றிய உங்களின் கருத்து என்ன?‘வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி’ என்பது பாஜவின் பொய்ப் பரப்புரைகளுக்குப் பொதுமக்கள் வைத்துள்ள பெயர். டிஜிட்டல் ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் இவற்றில் ஊடுருவலையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவது பாஜ அரசின் வழக்கமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் இத்தகையப் போக்குகள் நிலவுவதை வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது. அதிகார அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் ஒரு கோணம்தான், சில ஊடக நெறியாளர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்கிற இந்தியா கூட்டணியின் புறக்கணிப்பு நடவடிக்கை.பத்திரிக்கைகள்-மீடியாக்கள் நடுநிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம்! மற்றபடி டிஜிட்டல் மீடியா, சோஷியல் மீடியா போன்றவற்றில் பாஜவின் அதிகார அத்துமீறல்களை, பொய்ப் பரப்புரைகளை, அவிழ்த்து விடும் அவதூறுகளை முறியடிக்கும் வகையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? கூட்டணியை ஒருங்கிணைக்கும் அல்லது இயக்கும் விசையாக எது உள்ளது? இந்தியக் கூட்டணி முதல் ரவுண்ட் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜவின் 9 ஆண்டுகால ஜனநாயக விரோத, அரசியல்சட்ட விரோத, மக்கள் விரோத ஆட்சியே இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்திருக்கிறது. பாஜவுடன் இருக்கும் மற்ற நிழல் கூட்டணிகளான “அமலாக்கத்துறை” – “வருமானவரித்துறை” போன்றவை மேலும் பல கட்சிகளை இந்தியா கூட்டணிக்கு வரவழைக்கும். அரசியல் சட்டமும் அதன் கொள்கைகளும், மக்களும் தான்எங்கள் கூட்டணியை இயக்கும்விசை.கோயில்களின் கட்டுப்பாடு அறநிலையத்துறையிடம் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளாரே! அவரின் குற்றச்சாட்டுகளை கவனித்தீர்களா? இதற்குத் தமிழ்நாடு அரசின் பதில் என்ன?

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1118 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ₹5473 கோடி மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பிரதமரும் பேசியிருக்கிறார். அதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். இன்றைக்கு பாஜ ஆட்சியில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டித் தர இயலவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடியவில்லை. மாநிலத்திற்கு உரிய நிதி உரிமை- மாநில உரிமையை வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அரசியல் பேசி, அரசியல்சட்டப் பதவியான ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை ஆளுநராக வைத்து, தமிழ்மொழி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு – தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது!

தமிழ்நாட்டிற்கு 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகள் ஏதுமில்லை. சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை. ஆகவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளது என்பதைச் சொல்லி வாக்குச் சேகரிப்பதில் பிரதமருக்கு நெருடல் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதைச் சொல்ல இயலாத நிலையில் – பாஜ அரசின் தோல்வியைத் திசை திருப்பவே தமிழ்நாட்டில் சிறப்பாகக் கோயில் நிர்வாகத்தைச் செய்து கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை விமர்சிக்கிறார்.நடப்பு ஆண்டில் காவிரி நீர்ப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. டெல்டா உழவர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீர்வு தான் என்ன? காவிரி விவகாரத்தில் அரசியல்ரீதியான தீர்வு சாத்தியமா?

அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காகவே காவிரி நடுவர் மன்றம் துவங்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு தரப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தில் இறுதியும் செய்யப்பட்டுள்ளது. உழவர்களுக்குப் பாசனத்திற்கு வேண்டிய நீர் கிடைக்கவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் வலியுறுத்தி, இதுவரை தண்ணீரைப் பெற்று வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டு உழவர்களின் – தமிழ்நாட்டின் உரிமையை காப்பதில் எனது தலைமையிலான அரசு என்றும் உறுதியாக இருக்கும்.மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் கடிதம் எழுதி உள்ளீர்கள். ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா?

தமிழ்நாடு சமூகநீதி மண். இன்றைக்கு இந்தியாவில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மண். சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பொறுத்தமட்டில், “சென்ஸஸ்” என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் நிர்வாகப் பட்டியலில் இருக்கிறது. அதனால் தான் திமுகவும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” 2011ல் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பாஜ அரசு அந்த கணக்கெடுப்பு முடிவை வெளியிடவில்லை. அமைச்சரவையிலேயே 2015ல் இதற்காக நிபுணர் குழு அமைத்தும் இன்று வரை சாதிவாரிக் கணக்கெடுப்பின் அந்த நிபுணர் குழு அறிக்கையையும் வெளியிடவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் எப்படி 27 விழுக்காடு இடஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை வாய்ப்பு-கல்வியில் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததோ அது போல ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறேன்.

பா.ஜ. அதிமுக கூட்டணி உண்மையிலேயே முறிந்துவிட்டதா, இதனால் கூட்டணிக் கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா? சமீபத்தில் மற்ற மாநிலங்களில், பாஜவுடன் இருந்த கூட்டணியை ஒரு கட்சி முறித்துக் கொண்ட பிறகு நடந்த நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காட்சியையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களுக்கே கூட்டணி முறிந்து விட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அக்கூட்டணி முறிந்தாலும்-முறியா விட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஒன்றியத்தில் 9 ஆண்டுகாலம் பாஜ ஆட்சியின் அலங்கோலங்களையும்-தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். இப்போது நல்லாட்சி தரும் திமுகவை, நல்ல பல மக்கள் திட்டங்களைத் தந்துள்ள இந்த ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் சாதனைகளை படைக்கும் திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து களத்திற்கு செல்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அலங்கோலங்களை இரண்டரை ஆண்டுகளில் மாற்றி, நிர்வாக எஞ்சினை நேர்த்தியாக செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே திமுகவின் நல்லாட்சி, திமுக கூட்டணிக் கட்சிகளின் நல்லெண்ணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?